வசீம் தாஜுடீன் கொலை வழக்கு விசாரணை 

வசீம் தாஜுடீன் கொலை: பெண்ணொருவரால் அனுப்பி வைக்கப்பட்ட குறுந்தகவல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு

by Bella Dalima 03-05-2018 | 6:13 PM
Colombo (News 1st)  ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை பெறவுள்ளதாக இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்தனர். வசீம் தாஜுடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் கலந்துகொண்ட விருந்துபசாரத்தின் போது பெண்ணொருவரால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேலதிக நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் சந்தேகநபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, நாராஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தம்மிக்க பெரேரா ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.