செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தனுக்கு கடிதம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்ள வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தனுக்கு கடிதம்

by Bella Dalima 03-05-2018 | 8:55 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் ஒருகிணைப்புக் குழு கூட்டம் மிக நீண்டகாலம் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தற்போது கூட்டத்தை நடத்துவது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சமகால அரசியல் விடயங்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னரான மற்றும் பின்னரான விடயங்கள் தொடர்பில் தற்போது கலந்துரையாடுவது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கான திருத்தங்களையும் தீர்வுகளையும் மீட்டிப்பார்ப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டரசாங்கத்தின் இழுபறி நிலை அல்லது காலம் தாழ்த்தும் போக்கு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு அதிக அழுத்தம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பக்கூடிய வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தயார்ப்படுத்தல்கள் அவசியம் என அனைவராலும் உணரப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் , இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருக்கிணைப்புக் குழு கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கான திகதியை ஒழுங்குபடுத்துமாறு அந்தக் கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.