தொழிலதிபரை மணம் முடிக்கும் சோனம் கபூர்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரை மணம் முடிக்கும் சோனம் கபூர்

by Bella Dalima 02-05-2018 | 4:29 PM
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை மணக்கிறார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்கள் கொண்டவர் அனில் கபூர். அவருடைய மகளான சோனம் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ராணி முகர்ஜி நடித்த ‘பிளாக்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு வெளியான ‘நீரஜா’ படத்திற்காக, சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில், சோனம் கபூருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும் சோனம் கபூருக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி மும்பையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெறவுள்ளது. இருவரும் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், திருமணம் முடிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர்.