கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகள்

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நடைபெற்றன

by Bella Dalima 02-05-2018 | 7:37 PM
Colombo (News 1st)  சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று நடைபெற்றன. இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் அன்னாரது பூதவுடல் அக்கினியில் சங்கமமானது. இலங்கை சினிமாத்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 99 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இயற்கை எய்தினார். உள்நாட்டு, வௌிநாட்டுக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் அன்னாரின் பூதவூடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். திம்பிரிகஸ்யாய, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு அருகில், விசேட அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திர சதுக்கத்திற்கு பூதவூடல் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. அன்னாரின் இறுதி நிகழ்வில் இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் அதூர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். இரங்கல் உரையின் பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.