20ஆவது திருத்தம்: எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

by Bella Dalima 01-05-2018 | 8:01 PM
Colombo (News 1st)  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் தமது நிலைப்பாட்டினை தெரிவித்து வருகின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்படும் போது மூன்று முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுதல், தேர்தல் முறை மாற்றம் என்பனவே அவற்றில் முக்கியத்துவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை, நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவ்வேளையில் அது குறித்து தீர்மானம் எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முத்து சிவலிங்கம் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.