தோட்டத்தொழிலாளர்களின் விடுதலை எப்போது?

தோட்டத்தொழிலாளர்களின் விடுதலை எப்போது?

by Bella Dalima 01-05-2018 | 7:32 PM
Colombo (News 1st)  வியர்வை சிந்தும் உழைப்பாளிகள் உரிமைகளுக்காய் குரல் கொடுத்த தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாய் கொண்டாடி வருகின்றோம். எனினும், தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறந்த உதாரணமாகும். இலங்கை காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டனர். பல தலைமுறைகள் கடந்தும் இன்றும் பெருந்தோட்டங்களை நம்பியே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் தேயிலை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த போதிலும், அதற்காக உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் கடந்த பல தசாப்தங்களாக பின்தங்கியே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்காக நாளாந்தம் தேயிலை மலையில் போராடும் இவர்கள், சம்பளம், கல்வி, குடியிருப்பு, குடிநீர், போக்குவரத்து என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.
  • நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்தல்
  • சம்பளத்தில் இருந்து அறவிடப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தை வழங்குதல்
  • தொடர் குடியிருப்புகளில் இருந்து தனி வீடுகளில் குடியமர்தல்
  • முகாம்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் சொந்த வீட்டில் வாழ்தல்
இவ்வாறான முக்கிய கோரிக்கைகளேனும் நிறைவேற்றப்படாத நிலையில், பெருந்தோட்ட மக்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். மே முதலாம் திகதி... உழைப்பை சுரண்டிய முதலாளித்துவத்தின் கீழ் அடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு விடுதலை வழங்கப்பட்ட நாள். எனினும், உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களின் விடுதலை எப்போது?