கோடிக்கணக்கில் செலவிட்டு கொள்வனவு செய்யப்பட்ட Linear Accelerator இயந்திரங்கள் பயன்பாடற்ற நிலையில்

கோடிக்கணக்கில் செலவிட்டு கொள்வனவு செய்யப்பட்ட Linear Accelerator இயந்திரங்கள் பயன்பாடற்ற நிலையில்

கோடிக்கணக்கில் செலவிட்டு கொள்வனவு செய்யப்பட்ட Linear Accelerator இயந்திரங்கள் பயன்பாடற்ற நிலையில்

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2018 | 9:08 pm

Colombo (News 1st) 

கோடிக்கணக்கான ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் பயன்பாடின்றிக் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

Linear Accelerator இயந்திரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கதிர்வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் பெறுமதி சுமார் 350 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

இது இலங்கைக்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் காணப்படும் இரண்டு Linear Accelerator இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு 160 நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

கதிர்வீச்சு சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக அபேக்‌ஷா வைத்தியசாலையில் நோயாளரொருவர் நான்கு மாதங்களுக்கு தங்கியிருக்க வேண்டும்.

தனியார் வைத்தியசாலையில் ஒரு தடவை இந்த இயந்திரம் மூலம் சிகிச்சை பெறுவதாயின் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளது.

இவ்வாறு பெறுமதிமிக்க மூன்று Linear Accelerator இயந்திரங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டன.

அதில் இரண்டு இயந்திரங்கள், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் புற்றுநோய் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

எனினும், அவை பயன்பாடின்றி வைத்தியசாலையின் பின்புறமாக வைக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

அதற்கான கட்டிடம் உள்ளிட்ட உரிய வசதிகள் இன்னும் சில மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்ற பின்னர் நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். தெல்லிப்பளையில் Linear Accelerator இயந்திரத்தை வைப்பதற்கான கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த வைத்தியசாலைக்கு இயந்திரம் வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

அவ்வாறாயின், அந்த வைத்தியசாலைக்கு வழங்கப்படவிருந்த Linear Accelerator இயந்திரம் தற்போது எங்குள்ளது?

புற்றுநோயாளர்களைப் பாதுகாப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட 3 Linear Accelerator இயந்திரங்கள் பல காலமாக பயன்பாடின்றிக் காணப்படுகின்றமைக்குக் காரணம், அதிகாரிகளின் அறியாமையா?