முறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால் மக்கள் பாதிப்பு

முறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால் மக்கள் மீதான சுமை அதிகரிப்பு

by Staff Writer 30-04-2018 | 8:29 PM
COLOMBO (News 1st) முறையற்ற பொருளாதார நிர்வாகம் மக்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்கின்றது. சமையில் எரிவாயு விலை உயர்வு தற்போது மீண்டும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிகோளியுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 245 ரூபாவால் அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. இதனைத் தொடர்ந்து உணவுப் பொதியொன்றின் விலையை 10 ரூபாவாலும் அப்பம் ஒன்றின் விலையை இரண்டு ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம் அறிவித்தது. இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பை முன்னிறுத்தி, அநீதியான முறையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு வகைகளின் விலை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது. இதே வேளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 7.9 வீதம் வரை அதிகரித்திருந்தது. இந் நிலையில் தேங்காய், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்தலி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேசிக்காய், தேயிலை, வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்ட உணவுவகைகளின் விலை இந்த காலப்பகுதியில் கூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சுகாதாரம், மதுபானம், புகையிலை , பொருட்கள் மற்றும் சேவைகள் வீட்டுத்தளபாடங்கள், வீட்டுப்பராமரிப்பு போக்குவரத்து ஆடை பாதனி மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளின் செலவுகளும் அதிகரித்தன. வீடு, நீர், எரிவாயு, மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய பிரிவுகளின் செலவீனங்களும் அதிகரித்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரம் வரலாறு காணாதளவு வீழ்ச்சிக்கண்டிருந்தது. இந்த வீழ்ச்சி பொருட்களின் விலைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=QTWvCIyfvro