by Staff Writer 29-04-2018 | 7:53 PM
எல்.ரீ.ரீ.ஈயினருடன் தொடர்பு வைத்திருந்த நால்வருக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் உச்சிப்புளி பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பொலிஸார் நடத்திய சோதனையின்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்றழைக்கப்படும் கே.கிருஸ்ணகுமார், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சசிக்குமார் மன்னாரைச் சேர்ந்த என்.ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து சயனைட் குப்பிகள், ஜி.பி.எஸ்.கருவிகள், பணம் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.
இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னை உத்தண்டியில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த வி.சுபாஸ்கரன் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நால்வருக்கும் எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகிய இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டு சிறைதண்டனையும் தலா 45,500 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ராஜேந்திரன் என்பவருக்கு ஐந்தாண்டு சிறைதண்டனையும் 13,000 ரூபா அபராதமும் விதித்த நீதிபதி, சசிக்குமாருக்கு 6 மாத சிறைதண்டனையும் விதித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.