புனித சின்னங்களை வழிபட்டார் ஜனாதிபதி

சிரச வெசாக் வலயம்: அலங்காரப் பந்தலை திறந்துவைத்து புனித சின்னங்களை வழிபாட்டார் ஜனாதிபதி

by Staff Writer 29-04-2018 | 4:20 PM
COLOMBO (News 1st) இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள சிரச - யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தில் இம்முறையும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இம்முறையும் இலங்கை கடற்படையினர் வெசாக் வலயத்துடன் இணைந்துள்ளனர். கடற்படையினர் வழமைபோன்று வெசாக் வெளிச்சக்கூடுகளை அமைத்துள்ளதுடன் பக்தர்களுக்கு கடலை தானத்தை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். வெசாக் அலங்காரப் பந்தலையும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பார்வையிட முடியும். ''ஆலோகோ உதபாதி'' திரைப்படத்தையும் சிரச - யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு வருகை தருபவர்கள் பார்வையிட முடியும். பக்தர்களுக்காக இம்முறையும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கடற்படையின் வெசாக் பெரஹராவும் இன்றைய தினம் சிரச - யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தை அலங்கரிக்கவுள்ளது. மேலும், சிரச எப்.எம். அகில இலங்கை ரீதியில் நடத்திய பக்திப் பாடல் போட்டியின் இறுதிக் கட்டப் போட்டிகள், இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் சிரச - யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தில் நடைபெறுகின்றன. இதேவேளை சிரச யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தில் அமைந்துள்ள அலங்காரப் பந்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்துவைத்தார். எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் வலயத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி, புத்த பகவானை வழிபட்டார். இம்முறையும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்காரப் பந்தலையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். புத்த பகவானின் புனித சின்னங்கள், மிஹிந்து தேரரின் புனித சின்னங்கள் மற்றும் புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிபட்டார். சிரச யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் ஆசி வழங்கினர். https://www.youtube.com/watch?v=gzpdmTBHCtM