by Staff Writer 29-04-2018 | 8:40 PM
COLOMBO (News 1st) சித்திரா பௌர்ணமி தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களில் 14 ஆவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக
அமைகின்றது.
மாதந்தோறும் வரும் சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள்.
இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வழங்குவார்கள்.
மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப , அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள்.
சித்திரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பது வழக்கம்.
அத்துடன், தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பித்ருக்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.
சித்திரா பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
https://www.youtube.com/watch?v=l1R1FmwOapg