கிளிநொச்சி விளையாட்டரங்கு  முழுமை பெறுமா?

கிளிநொச்சி விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகள் முழுமை பெறுவது எப்போது?

by Staff Writer 29-04-2018 | 8:36 PM
COLOMBO (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில், கிளிநொச்சியில் பாரிய விளையாட்டரங்கொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 325 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கிற்கான அடிக்கல், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டரங்கத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 8 தடங்களை கொண்ட ஓட்டப்பாதை மற்றும் 25 வகையான விளையாட்டுகளுக்கான உள்ளக அரங்க வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன் நிர்மாணப்பணிகளை 2013ஆம் ஆண்டில் பூர்த்தி செய்து, அந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விழாவை அங்கு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த நிர்மாணப்பணிகள் மந்த கதியில் இடம்பெற்றுவந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு சென்று பார்வையிட்டார். 2015 ஒக்டோபர் மாதம் அங்கு சென்ற அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, 2016ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விழா இந்த அரங்கில் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. எனினும், திட்டமிட்டவாறு 2016 இல் கிளிநொச்சியில் தேசிய விளையாட்டு விழாவை நடத்த முடியாமற்போனதுடன், அதனை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கிளிநொச்சி விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த விளையாட்டரங்கில், நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கின் ஒரு பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன் நிர்மாணப் பணிகள் முழுமை பெற்றால், போதிய வளங்களின்றியும், தேசியளவில் சாதிக்கும் வடக்கு வீர, வீராங்கனைகளுக்கு அது ஒரு வரப்பிரசாதமே. விளையாட்டுத்துறை அமைச்சரே! இது உங்களின் கவனத்திற்கு.... https://www.youtube.com/watch?v=vlBsBrm1atA