நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்

550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்: பெருவில் கண்டுபிடிப்பு

by Bella Dalima 28-04-2018 | 5:45 PM
லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே சமயத்தில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 200 ஒட்டகங்களை பெரிய அளவில் பலி கொடுத்து, சடங்கு நிறைவேற்றப்பட்ட பயங்கர இடத்தை வடக்குக் கடற்கரைப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெருவில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாமென கருதப்படுகிறது. 550 ஆண்டுகளுக்கு முன்னால் பெருவின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், ஒரே சமயத்தில் 140 -இற்கும் அதிகமான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். முற்கால சிமு நாகரிக மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இன்றைய ட்ருஜிலோவுக்கு அருகில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 200-க்கு மேலான லாமா வகை ஒட்டகங்களும் இந்த குழந்தைகளோடு புதைக்கப்பட்டுள்ளன. தேசிய புவியியல் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடைபெற்ற இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு, குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு கண்டுபிடிப்பை தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என இந்த ஆய்வை தலைமையேற்று வழிநடத்திய ஜான் வெரானோ கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு 3,500 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ஹூயான்சாகுய்ட்டோ-லாஸ் லாமாஸ் என்று அறியப்படுகிறது. இந்த இடம் தான் மனித நரபலி சம்பவம் பற்றி கண்டறியப்பட்ட முதல் இடமாகும். இந்த நரபலி சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 140 குழந்தைகளும் 5 முதல் 14 வரையான குழந்தைகள் என தெரிகிறது. ஆனால், அதில் பெரும்பாலானோர் 8 முதல் 12 வயது வரையானவர்கள் என தேசிய புவியியல் இணையத்தளம் தெரிவித்துள்ளது. மார்பு நடு எலும்பு உள்ளிட்ட எலும்புகளில் வெட்டு அடையாளங்கள் இருப்பதால் இந்த குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என கருதப்படுகின்றனர். விலா எலும்புகள் பல சேதமடைந்திருப்பதால், இதயங்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சின்னாபாரில் என்கிற தாதுவில் இருந்து தயாரிக்கப்பட்ட சிவப்பு வண்ணப்பொருள் இந்த குழந்தைகள் பலர் மீது பூசப்பட்டுள்ளது. இது நரபலி சடங்கின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த குழந்தைகளோடு நரபலி கொடுக்கப்பட்டுள்ள ஒட்டகங்களும் 18 மாதங்களுக்குள் இருந்த இளம் ஒட்டகங்கள் என்று தெரிகிறது. இவை ஆண்டஸ் மலைத்தொடரை நோக்கி கிழக்கு திசை பார்வையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கார்பன் பரிசோதனைப் படி, ஆடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த சம்பவம் கிட்டத்தட்ட கி.பி 1400 முதல் 1450க்குள் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. சந்திரக்கடவுளை வழிபட்டு வந்த சிமு மக்கள் சில தசாப்தங்களுக்கு பின்னர் இன்கா நாகரிகத்தால் தோற்கடிக்கப்பட்டனர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் தென் அமெரிக்கா வந்த ஸ்பானியர்கள் இன்கா பேரரசைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.                   Source: BBC