சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் பூர்த்தி

ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் பூர்த்தி: மட்டக்களப்பில் அஞ்சலி

by Bella Dalima 28-04-2018 | 4:43 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அன்னாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, தராகி சிவராமின் மூத்த சகோதரி அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிவராமின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைக்கு விசேட சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை போராட்டமும் நடத்தப்பட்டது. வட மாகாண ஊடகவியலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார். தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்து அதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சாரும்.