முள்ளுத்தேங்காய் செய்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கேகாலையில் முள்ளுத்தேங்காய் செய்கையை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானம்

by Bella Dalima 28-04-2018 | 7:14 PM
Colombo (News 1st)  கேகாலை மாவட்டத்தில் முள்ளுத்தேங்காய் செய்கையை தற்காலிகமாக இடைநிறுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (27) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கை கிடைக்கும் வரை முள்ளுத்தேங்காய் செய்கையை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்ததாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். அறிக்கை கிடைத்ததன் பின்னர் அதிலுள்ள பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் செய்கைக்கு பொருத்தமற்ற இடங்களில் முள்ளுத்தேங்காய் செய்கையை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் தௌிவுபடுத்தினார். இதன்படி, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள், அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய இடங்கள், நீரேந்துப் பிரதேசங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் முள்ளுத்தேங்காய் உற்பத்தியை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் முள்ளுந்தேங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது. தெரணியகல உடப்பொல தோட்டத்தின் யட்டிபொல பிரிவில் இன்று முள்ளுத்தேங்காய் மரங்கள் நடப்பட்டன.