உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை

உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை: இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

by Bella Dalima 28-04-2018 | 3:41 PM
Colombo (News 1st)  சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான விலைச்சுட்டெண்ணை வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார். இதன் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. எரிவாயுவின் விலை அதிகரிக்கும் பட்சத்தில், பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டார். சமையல் எரிவாயுவிற்கான விலையை நேற்று (27) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதிக்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1676 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.