பிரபல மாடல் அழகி கோர மரணம்

அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி நுண் பூச்சிகளுக்கு இரையாகி கோர மரணம்

by Bella Dalima 28-04-2018 | 6:10 PM
இரண்டாம் உலகப்போரின் போது தனது நாட்டிற்காகக் கடமையாற்றிய பிரபல மாடல் அழகி ஒருவர் தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் கவனிப்பார் யாருமின்றி, சிரங்கால் பாதிக்கப்பட்டு, நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார். அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான ரெபேக்கா செனி (93) தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்சினையால் அவதியுற்று ஜார்ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. ரெபேக்காவுக்கு அது தொற்றிக்கொண்டது. மருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் ரெபேக்காவிற்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டு பண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது கைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் தாதியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபேக்காவின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரெபேக்காவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ்நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரெபேக்காவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள், ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை பலரும் எழுப்பியுள்ளனர்.