EPDPயினர் இருவரை நாடுகடத்த நடவடிக்கை

வௌிநாட்டில் தங்கியுள்ள EPDP உறுப்பினர்கள் இருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

by Bella Dalima 27-04-2018 | 5:01 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்து விட்டு வௌிநாட்டில் தங்கியுள்ள EPDP உறுப்பினர்கள் இருவரை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவித்தலுக்கான கடிதம் கடந்த 17 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்து மேலும் சிலரை காயப்படுத்திய வழக்கில் EPDP உறுப்பினர்களான நெப்போலியன் என்றழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் மற்றும் மதன் என்றழைக்கப்படும் நடராஜா மதனராஜா ஆகியோருக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இந்த தண்டனையை விதித்தார். எனினும், குற்றவாளிகள் இருவரும் வௌிநாட்டில் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை நாடு கடத்தி யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பை அறிவித்த தினமே உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சினால் கடந்த 17 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கட்டளையை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு, குற்றவாளிகளை நாடு கடத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஏனைய செய்திகள்