புதிய வரலாறு ஆரம்பம்

புதிய வரலாறு ஆரம்பம்: தென் கொரிய விருந்தினர் வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்ட கிம் ஜாங் உன்

by Bella Dalima 27-04-2018 | 10:07 PM
கொரிய தீபகற்பத்தில் பல வருட காலமாக நிலவி வந்த முறுகல் நிலை மற்றும் அதிகாரப்போக்கை முடிவிற்குக் கொண்டு வந்த கிம் ஜாங் உன், 1953 ஆம் ஆண்டின் பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த முதலாவது வட கொரிய அரச தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இன்று இடம்பெற்ற கொரிய தலைவர்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் தசாப்தகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் பல்வேறு சாதகத்தன்மைகளின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது. யுத்த நிறுத்த பிராந்தியத்தில் சந்தித்துக்கொண்ட இரு நாட்டுத் தலைவர்களும் கைலாகு கொடுத்தமை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டின் பின்னர் கொரிய தென் பகுதிக்கு விஜயம் செய்த வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜா இன்-உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். ஜனநாயக எல்லையான பன் முன் ஜம் கிராமத்தில் வட கொரிய ஜனாதிபதிக்கு வரவேற்பளித்த தென் கொரிய ஜனாதிபதி, கைலாகு கொடுத்து வரவேற்றதுடன் இந்த சந்திப்பு அந்த நாட்டு நேரப்படி காலை 09.30 ற்கு இடம்பெற்றது. யுத்த நிறுத்த எல்லையைக் கடப்பதற்கு முன்னர் இரு நாட்டின் தலைவர்களும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எல்லையைக் கடந்து வட கொரியாவிற்கு வருகை தருமாறு தென் கொரிய ஜனாதிபதிக்கு வட கொரிய ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார். கிம்மிற்கு இதன்போது இராணுவப் பிரசன்னமற்ற எல்லைக்கிராமத்தில் வசிக்கும் தென் கொரிய சிறுவர்களால் பூச்செண்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சந்திப்பு சிவப்பு கம்பளத்தில் இடம்பெற்றதுடன் தென் கொரிய பாரம்பரிய இசையும் இதன்போது இசைக்கப்பட்டது. சமாதான இல்லத்திற்குள் அரச தலைவர்கள் பிரவேசித்ததுடன், விருந்தினர் வரவேற்பு புத்தகத்தில் "புதிய வரலாறு ஆரம்பமாகியுள்ளது - சமாதானக் காலம் வரலாற்றின் இந்த புள்ளியில் இருந்து ஆரம்பாகின்றது" என எழுதி கிம் ஜாங் உன் கையெழுத்திட்டார். இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்ட எல்லைப்பகுதியில் நல்லிணக்க பைன் மரத்தை நாட்டிய கொரிய தீப கற்பத்தின் தலைவர்கள், சமாதான உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொண்டனர். இதன்போது, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத நிராகரிப்புக் கொள்கை மற்றும் அதற்காக ஒன்றிணைந்து உழைப்பதற்கான உறுதிமொழியையும் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் வழங்கினர். 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரிய யுத்தத்தை உத்தியோகப்பூர்வமாக முடிவுறுத்தும் நிரந்தர மற்றும் உடனடி சமாதானத்தை வலுப்படுத்துவதற்கான அமெரிக்கா மற்றும் சீனாவின் பணிகளுக்கு இந்த வருடம் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் கொரிய தீப கற்பத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.