மூன் ஜியே இன்னை சந்திக்கிறார் கிம் ஜாங் உன்

எல்லை கடந்து சந்திப்பு: மூன் ஜியே இன்னை சந்திக்கிறார் கிம் ஜாங் உன்

by Bella Dalima 26-04-2018 | 6:58 PM
1953 ஆம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர் தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதிவாகவுள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே இன்னை தனியாக கிம் ஜாங்-உன் சந்திக்கவுள்ளார். அணு ஆயுதங்களை தற்காலிகமாகக் கைவிடுவதாக வட கொரியா அண்மையில் அறிவித்திருந்தது. இது பற்றி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிகிறது. வட மற்றும் தென் கொரியாக்களுக்கு இடையில் தெளிவாக வரையறுக்கப்பட்ட இராணுவ எல்லைக்கோட்டைக் கடந்து கிம் ஜாங்-உன் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில், அணு ஆயுத ஒழிப்புக்கு விருப்பம் தெரிவித்து, இந்த இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்திற்கு வருவது கடினம் என தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் ஜாங்-சியோக் கூறியுள்ளார். 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளைப் போல நடைபெறுகின்ற இந்த சந்திப்பு, இரு கொரியாக்களுக்கும் இடையில் பல மாதங்கள் மேம்பட்ட உறவின் விளைவாக வந்துள்ளது. இதுவே, கிம் ஜாங்-உன்னுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இடையில் சந்திப்பு நடக்கக்கூடிய சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.