அர்ஜுன், கசுனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Bella Dalima 26-04-2018 | 4:12 PM
Colombo (News 1st)  இலங்கை மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அறிக்கை பிரதிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தை புறக்கணித்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை விரைவில் நாட்டிற்கு வரவழைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு இலகுவாக குறித்த அறிக்கை பிரதிகளை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல் 192 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டது.