சவுதிக்கு சென்ற மகளை தொடர்புகொள்ள முடியவில்லை

சவுதிக்கு சென்ற மகளை தொடர்புகொள்ள முடியவில்லை: தாயார் தகவல்

by Bella Dalima 25-04-2018 | 9:44 PM
Colombo (News 1st)  சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற தமது மகளை கடந்த சில வருடங்களாக தொடர்புகொள்ள முடியவில்லை என அவரின் தாயார் தகவல் தெரிவித்தார். ஹற்றன் - குடாகம பகுதியைச் சேர்ந்த சுப்பையா விக்னேஷ்வரி 2005 ஆம் ஆண்டில் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். கம்பளையிலுள்ள வௌிநாட்டு முகவர் நிலையத்தின் தரகரொருவர் ஊடாக 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விக்னேஷ்வரி வௌிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் தமாமிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக விக்னேஷ்வரி 23 வயதில் அனுப்பப்பட்டதாக அவரது தாயார் குறிப்பிட்டார். கடந்த 13 வருட காலத்தில் மூன்று முறை மாத்திரமே தொலைபேசியூடாக உரையாடியதாக விக்னேஷ்வரியின் தாயார் தெரிவித்தார். வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட பல இடங்களில் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை என விக்னேஸ்வரியின் தாயார் கூறினார். இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சுப்பையா விக்னேஷ்வரி தொடர்பில் 2007ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டது. விக்னேஷ்வரியை தொலைபேசியூடாக 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி தொடர்புகொண்டதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. எந்தவித சிக்கலும் இல்லை என விக்னேஷ்வரி தெரிவித்ததையடுத்து முறைப்பாடு தொடர்பான விசாரணை நிறைவு செய்யப்பட்டதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வௌிநாட்டு உறவுகள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று மீண்டும் வழங்கிய தகவல்களுக்கமைய இதுகுறித்து அங்குள்ள தூதரகத்திற்கு அறிவிப்பதாக பணியகம் தெரிவித்தது.