சாட்சி அச்சுறுத்தல்: மீள் நினைவூட்டலுக்கு உத்தரவு

வித்தியா கொலையின் சாட்சியை அச்சுறுத்திய சந்தேகநபரின் பிணை குறித்து மீள் நினைவூட்டலை அனுப்புமாறு அறிவிப்பு

by Bella Dalima 25-04-2018 | 4:41 PM
Colombo (News 1st)  புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரின் பிணை குறித்து மீள் நினைவூட்டலை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புமாறு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எல். ரியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளார். நீதிமன்றங்களுக்கான விடுமுறைக்காலம் என்பதால் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள பிணை மனுவிற்கான நினைவூட்டலை அனுப்புமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார், அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார். எனினும், வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்தியமைக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையின்படி கடத்தல், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.