ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றம்

ஐ.தே.க-வில் மாற்றம்: பொதுச்செயலாளராக அகிலவிராஜ் காரியவசம் நியமனம்

by Bella Dalima 25-04-2018 | 8:06 PM
Colombo (News 1st)  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை நியமிப்பதற்கு முழுமையான அதிகாரமுடைய அரசியல் குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிமை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அதிகாரமுடைய அரசியல் குழு அலரி மாளிகையில் இன்று கூடியது. இதன்போது, கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக அமைச்சர் நவீன் திசாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படவுள்ளதுடன், உப தலைவராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அதிகாரமுடைய அரசியல் குழுவின் பெரும்பான்மையோரின் ஏகமனதான விருப்பத்துடன் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்கள் நாளை (26) கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், ஏனைய பதவிகள் நாளைய சந்திப்பின் பின்னர் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஏனைய செய்திகள்