பிரதமருக்கு நெருக்கமானவர்கள் உதயங்கவையும் அர்ஜூன மகேந்திரனையும் நாட்டிற்கு அழைத்து வர ஒத்துழைப்பார்களா?

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் உதயங்கவையும் அர்ஜூன மகேந்திரனையும் நாட்டிற்கு அழைத்து வர ஒத்துழைப்பார்களா?

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் உதயங்கவையும் அர்ஜூன மகேந்திரனையும் நாட்டிற்கு அழைத்து வர ஒத்துழைப்பார்களா?

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2018 | 7:26 pm

Colombo (News 1st)

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளுக்காக தேவைப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரை இன்னமும் நாட்டிற்கு வரவழைக்க முடியாது போயுள்ளது.

அவர்கள் இருவருக்கும் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அது ஐக்கிய அரபு இராச்சியத்தின் விருப்பத்திற்கு அமையவே சாத்தியப்படும் என இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அந்த நாட்டிற்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், இலங்கையால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்க முடியாது என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தினை விட மாறுபட்ட நிலை சிங்கப்பூரில் காணப்படுவதால், இன்னும் சில தினங்களுக்குள் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர முடியும் என பொலிஸார் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க கடந்த மார்ச் 26 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டார்.

உதயங்க வீரதுங்கவை அங்கிருந்து அனுப்பிவைக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு பதிலாக, சந்தேகநபர்களை ஒப்படைத்தலுக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளதாக அறியக்கிடைத்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் சந்தேகநபர்களை ஒப்படைப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்று 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான அங்கீகாரத்தை இலங்கை பாராளுமன்றம் வழங்காமையினால் இந்த செயற்பாடுகளில் சிக்கல் எழுந்துள்ளது.

சந்தேகநபர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை இல்லாத போதிலும் ஐக்கிய நாடுகளின் ஊழல் தடுப்பு கொள்கையின் கீழ் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு வரவழைப்பதற்கு முயற்சிக்க முடியும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சட்ட ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கிருக்கும் இலங்கை தூதுவர் இது தொடர்பில் விசேட பொறுப்புகளை நிறைவேற்ற வேணடியுள்ள போதிலும் தூதுவர் சுலைமான் ஜெஃப்ரி மொஹிடீனிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

தூதுவரின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டத்தரணிகளின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தூதுவராக நியமிக்கப்பட்ட சுலைமான் ஜெஃப்ரி மொஹிடீன் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக செயற்பட்ட, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவராவார்.

மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த வழக்கிற்காக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன மகேந்திரனை கைது செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கு சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் சந்தேகநபர்களை ஒப்படைப்பது தொடர்பிலான உடன்படிக்கை சட்டப்பூர்வமாகக் காணப்படுவதுடன், அந்த உடன்படிக்கை இல்லாவிடினும் பொதுநலவாய நாடுகள் என்ற அடிப்படையில் இலகுவில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என சட்டத்துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், அர்ஜூன மகேந்திரனை கண்டுபிடித்தல், கைது செய்தல் மற்றும் நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகளை இலகுவில் முன்னெடுப்பதற்கு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் தலையீடு அவசியமாகும்.

தற்போது சிங்கபூரின் உயர்ஸ்தானிகராக செயற்படும் சட்டத்தரணி நிமால் வீரரத்னவும் சிறிது காலம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இழந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு 5 வருட திட்டத்தின் பிரதானி என்ற அடிப்படையில் அர்ஜூன மகேந்திரன் பிரதமருடன் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட விஜயத்தின் இணைப்பாளராக நிமால் வீரரத்ன செயற்பட்டார்.

அவர் வார்னஸ் என்ற சட்ட நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் ஆவார்.

அந்த நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, மஹிந்த ஹரதாச குறித்த நிறுவனத்தின் மற்றுமொரு பிரதான பங்குதாரர் ஆவார்.

மஹிந்த ஹரதாச ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் என்பதுடன் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலும் செயற்பட்டிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதுவர்களாக செயற்படும் – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்களான இவர்கள் உதயங்க வீரதுங்க மற்றும் அர்ஜூன மகேந்திரன் ஆகியோரை நாட்டிற்கு அழைத்து வர ஒத்துழைப்பு வழங்குவார்களா?

அவர்களின் போதிய ஒத்துழைப்பு இன்றி சந்தேக நபர்களை அழைத்து வர முடியுமா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்