கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப் பொதிகளில் மோசடி

மூதூரில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப் பொதிகளை வழங்குவதில் மோசடி

by Bella Dalima 24-04-2018 | 4:24 PM
Colombo (News 1st)  திருகோணமலை - மூதூர் பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுப் பொதிகளில் மோசடி செய்த வர்த்தகருக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உணவு முத்திரைகள் வழங்கப்பட்டு, அதற்கான பொருட்களை விநியோகிக்க கடையொன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உணவு முத்திரைக்கு பதிலாக பெறுமதி குறைவான பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கர்ப்பிணித் தாய்மார்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய, நுகர்வோர் அதிகார சபையின் புலன்விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 2000 ரூபாவிற்கு பதிலாக 1544 ரூபா பெறுமதியான பொருட்களே விநியோகிக்கப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டதாக அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார். இதற்கமைய, குறித்த வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.