ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச்சென்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற வேலையற்ற பட்டதாரிகள்

by Bella Dalima 24-04-2018 | 8:40 PM
Colombo (News 1st) தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாக அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், அவை நிறைவேற்றப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்ட பட்டதாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக இவர்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர். இதனால் கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூட வேண்டிய நிலைமை பொலிஸாருக்கு ஏற்பட்டது. பின்னர் கலந்துரையாடுவதற்காக ஐவருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல இடமளிக்கப்பட்டது. இதனையடுத்து, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானரத்ன தேரர் தெரிவித்ததாவது,
இரண்டு கலந்துரையாடல்களுக்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பிரதமரின் செயலாளருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மீண்டும் உரிய முறையில் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதாக அவர்கள் உறுதி வழங்கினர். அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக அரசாங்கம் கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்க வேண்டும். வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா என ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நாம் பார்ப்போம். அது நிறைவேற்றப்படாவிடின் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
  இதேவேளே, யாழ். மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வின் இரண்டாம் கட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 500 தொடக்கம் 600 பட்டதாரிகளுக்கு இன்று நேர்முகத்தேர்வு இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.