இரணைத்தீவில் சாத்வீகப் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி இரணைத்தீவில் சாத்வீகப் போராட்டம்

by Bella Dalima 24-04-2018 | 9:56 PM
Colombo (News 1st)   இரணைத்தீவிற்கு நேற்று (23) சென்ற மக்களில் ஒருசாரார், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அங்கு தங்கியிருந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரணைத்தீவிலுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும் 360ஆவது நாள் சாத்வீகப் போராட்டம் இன்று அங்கு முன்னெடுக்கப்படுகின்றது. நேற்று இரணைத்தீவிற்கு சென்றவர்களில் ஒருசாரார் இரணைமாதா நகருக்கு திரும்பிய நிலையில், மற்றுமொரு சாரார் அங்கு தங்கியிருந்தனர். இரணைத்தீவிலுள்ள தேவாலாயத்தில் தங்கியுள்ளவர்கள், அங்கிருந்து தமது சாத்வீகப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இரணைத்தீவில் குடிநீர், மலசலகூட வசதிகளற்ற நிலையிலும், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை அங்கேயே தங்கியிருக்கப்போவதாக மக்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, இரணைத்தீவில் அட்டை பிடிக்கும் தொழிலில் சுமார் 26 வருடங்களின் பின்னர் பெண்கள் இன்று ஈடுபட்டனர். இந்நிலையில், இரணைத்தீவிற்கு சென்றவர்களின் பெரும்பாலானோர் மீண்டும் இரணைமாதா நகருக்கு திரும்பியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். தற்போது அங்கு தங்கியுள்ள மக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லை எனவும், அவர்கள் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு கருதியே இரணைத்தீவில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். காணிகளை விடுவிப்பது தொடர்பிலான நடவடிக்கை குறித்து தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில், அந்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார். இந்த நிலையில், இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஷ் பொன்னையாவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. இரணைத்தீவிற்கு சென்று நேரடி கள ஆய்வொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து அங்கு செல்லவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார். எதிர்வரும் 27ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்