இலங்கையில் வெவ்வேறு தினங்களில் மே தின கொண்டாட்டம்

இலங்கையில் வெவ்வேறு தினங்களில் மே தின கொண்டாட்டங்கள்

by Bella Dalima 24-04-2018 | 3:51 PM
Colombo (News 1st)  சர்வதேச தொழிலாளர் தினத்தை முழு உலகமே மே முதலாம் திகதி கொண்டாடுகின்ற போதிலும், இலங்கையில் அந்த நாள் இவ்வருடம் 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில், ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு தினங்களில் மே தின கொண்டாட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றன. நல்லிணக்க அரசாங்கத்தின் பிரதான பங்களாளி கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மே தின ஊர்வலத்தை மே 7 ஆம் நடத்தவுள்ளன. என்றாலும், பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்த்தை வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேசம் கொண்டாடும் ஒரு தினத்தை அரசாங்கம் மாற்றியதற்காக தம்மால் மாற்ற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின கொண்டாட்டம் மே முதலாம் திகதி காலி சமனல மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மே 7 ஆம் திகதி மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக, கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறினார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மே 7 ஆம் திகதி மட்டக்களப்பில் மே தின கூட்டத்தினை நடத்தும் என கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார். மலையகத்தின் பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மே 7 ஆம் திகதி நுவரெலியாவில் மே தினத்தைக் கொண்டாட தீர்மானித்துள்ளது. அமைச்சர்களான பி.திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வீ. ராதா கிருஷ்ணன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மே 7 ஆம் திகதி தலவாக்கலையில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தது.