டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

by Staff Writer 24-04-2018 | 1:25 PM
COLOMBO (News 1st) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக நாணய மாற்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகள் மற்றும் இற்குமதியாளர்களின் டொலருக்கான கேள்வி அதிகரித்தமையே இதற்கு காரணமாகும். புது வருட காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ஏப்ரல் 18ஆம் திகதி 156 ரூபாய் 50 சதமாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை 156 ரூபாய் 25/35 சதமாக நிலவிய டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து 156 ரூபாய் 85/95 சதமாக குறைவடைந்துள்ளது. இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் பல புதுவருட காலத்தில் மூடப்பட்டிருந்தமையை தொடர்ந்து நேற்றைய தினம் மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமையினால் அரச மற்றும் தனியார் வங்கிகளில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நாணய மாற்று வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் பணவீக்க வீதத்தினை 4 முதல் 5 வீதமாக பேணுகின்ற பட்சத்தில் நாணய பெறுமதி இறக்கத்தினை 2 முதல் 3 வீதமாக பேண முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.