by Staff Writer 23-04-2018 | 8:38 PM
COLOMBO (News 1st) கிளிநொச்சி - இரணைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், இன்று தமது மண் நோக்கி படகுகளில் பயணித்தனர்.
359 நாட்களாக சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில், அங்கு செல்வதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.
இரணைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட 360 பேர் 40 படகுகளில் இன்று தமது மண் நோக்கி பயணித்தனர்.
1992 ஆம் ஆண்டு இரணைத்தீவிலிருந்து வெளியேறிய மக்கள், தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு அரசியல்வாதிகள் வாக்குறுதியளித்தும் தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், அங்கு செல்வதற்கு தீர்மானித்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
இரணைத்தீவிற்கு சென்றவர்களில் பலர் இரணைமாதா நகருக்கு இன்று மாலை திரும்பியதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
எனினும், சாதமாக பதில் கிடைக்கும் வரை இரணைமாதா நகரில் தங்கிருந்து தமது கவனயீர்ப்பை தொடர்வதற்கு ஒருசாரார் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, நூறுக்கும் அதிகமானோர் இரணைமாதா நகரில் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இரணைத்தீவு தொடர்பில் ஆராய்வதற்காக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட சிலர், கடந்த வருடம் ஜூன் மாதம் அங்கு சென்றிருந்தனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.
இரண்டு வார கால அவகாசம் தருமாறும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடி தீர்வைப்
பெற்றுத்தருவதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இரணைத்தீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி - நாச்சிக்குடா கடற்படை முகாமில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது, மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சோபனையும் தெரிவிக்கவில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், இரணைத்தீவு மக்கள் 359 நாட்களாக சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு தீவுகளை இணைத்த பிரதேசமே இரணைதீவு.
யுத்தம் காரணமாக, 225 குடும்பங்கள் 1992ஆம் ஆண்டில் இரணைத்தீவிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அங்கிருந்து வெளியேறிய மக்கள் இரணைமாதா எனும் புதிய கிராமமொன்றை உருவாக்கி அங்கு குடியேறினர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து இரணைத்தீவு மக்களும் தமது பூர்விக நிலத்தில் மீள்குடியேற வேண்டுமென கோரி வந்தனர்.
எனினும், இரணைத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதால், மக்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=zSNcWG37ZI0