மத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையுமா?

மத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அறிகுறி

by Staff Writer 22-04-2018 | 8:06 PM
COLOMBO (News 1st) மத்திய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கான உத்தேச கடன் இதுவரையில் கிடைக்கவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் மத்திய அதிவேக வீதி நிர்மாணிக்கப்படுகின்றது. கடவத்தையில் இருந்து கலகெதர வரையான மத்திய அதிவேக வீதியை விரைவில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன் முதலாவது கட்டமான கடவத்தையில் இருந்து மீரிகம வரையான 37 கிலோமீட்டர் வீதி சீனா - எக்சிம் வங்கியின் கடனுதவியுடன் சீன நிறுவனமொன்று நிர்மாணிக்கவுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட 158.4 பில்லியன் ரூபாவை சீனாவின் எக்சிம் வங்கி இதுவரை வழங்காத நிலையில் ஆரம்ப கட்ட நிர்மாணப்பணிகள் ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீரிகமவில் இருந்து பொத்துஹெர வரையில் மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் அமைந்துள்ளது. 16 உள்ளூர் நிறுவனங்கள் 4 குழுக்களாக பிரிந்து நிர்மாணிக்கப்படும் இந்த வீதிக்கு நான்கு உள்ளூர் வங்கிகள் கடனுதவி வழங்கியுள்ளன. 137.09 பில்லியன் ரூபா செலவில் இந்த கட்டத்தை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில் தற்போது 10 பில்லியன் ரூபா நிதியை நான்கு உள்ளூர் வங்கிகள் ஒதுக்கியுள்ளன. பொதுஹெர தொடக்கம் கலகெதர வரையான மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணியை ஜப்பானின் தய்ஸே நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களுக்கு அமைய, இந்த மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பானின் டோக்கியோ மிட்சுபிஷி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்ட 153 பில்லியன் ரூபா கடனுதவி தொடர்ந்தும் தாமதமாகியுள்ளது. அதிக வட்டிக்கு மேலதிகமாக 10.07 பாதுகாப்புக் கட்டணம் , 1.1 தயார் படுத்தல் கட்டணம் மாத்திரமின்றி 0.25 தரகுப் பணம் என்பன குறித்த கடனில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனை பெற்றுக் கொள்வதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வீதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திட தாய்சே நிறுவனத்தை தெரிவு செய்தமை தொடர்பில் அண்மையில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, மத்திய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கான காணியை இழந்த பெரும்பாளானவர்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். https://www.youtube.com/watch?v=CVcJex9SB5o