உதயங்க வீரதுங்கவை அழைத்து வருவதில் தாமதம்

உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வருவதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதற்கு காரணம் என்ன?

by Staff Writer 22-04-2018 | 7:47 PM
COLOMBO (News 1st) டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு வரவழைக்க இதுவரையில் முடியாமற்போயுள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இலங்கை நீதிமன்றத்தால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடியாணைக்கமைய கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க தொடர்ந்தும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான ஆவணங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் நாடுகடுத்தல் சட்டத்திற்கு அமைய உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய அதற்கு தேவையான ஆவணங்கள் தயார்செய்யப்படுவதாகவும் அரச அதிகாரி குறிப்பிட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நாடுகடுத்தல் ஒப்பந்தத்தை இலங்கையில் ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக உதயங்க வீரதுங்கவை மீள வரவழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் இலங்கை பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லையென சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் நாம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கை தூதுவர் சுலைமான் ஜிவ்ரி முஹைதீனிடம் வினவினோம். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் தூதுவராலயத்துக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார். அரசினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கமைய சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறினார். https://www.youtube.com/watch?v=RH8jpGUL_J0