அல்லிராணிக் கோட்டையை புனரமைக்குமாறு கோரிக்கை

அல்லிராணிக் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

by Staff Writer 22-04-2018 | 8:37 PM
COLOMBO (News 1st) அழிவடைந்துவரும் தொல்லியல் சின்னமாகிய மன்னார் அல்லிராணிக் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் - அரிப்பு கிராமத்திலுள்ள - அல்லிராணிக் கோட்டை தமிழர்களது பண்பாட்டு வரலாற்றிலும், புராதான வாணிப பண்பாட்டு வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த மையமாக உள்ளதாக தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிவந்துள்ளது. முழுவதும் செங்கற்களினால் அமைக்கப்பட்டுள்ள இந்த அல்லிராணிக் கோட்டை சதுர வடிவான கட்டமைப்புக்காக அமையப்பெற்றுள்ளது. தொல்லியல் ரீதியாக அல்லிராணிக் கோட்டையின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருப்பதுடன், அதன் ஐதீக கதைகளிருந்து இதன் தொன்மையை எடுத்தியம்புவதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அல்லிராணிக் கோட்டையின் வரலாறு போர்த்துக்கேயர் காலத்திலிருந்து ஆரம்பமாகுவதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்களின் ஆவணங்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் புனரமைக்கப்பட்டு, அதன் அருகே வேறு பங்களாக்கல் நிர்மாணிக்கப்பட்டு சிறந்த நிர்வாக முகாமைத்துவ மையாக மாற்றப்பட்டதற்கான சான்றுகள் இன்றும் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வுகளிலிருந்து வௌிப்படுத்தப்படகின்றன. இந்த கோட்டைக்கு அண்மையில் காணப்படுகின்ற வௌிச்சவீடு அரிப்பு கிராமத்தின் வரலாற்று பொருளாதாரத்தின் தன்மைக்கு சான்றுபகர்வதுடன், இந்த முகத்துவார பகுதி பிரதான துறைமுகமாக இருந்திருக்கலாம் என வரலாற்றாய்வாய்ளர்கள் கூறுகின்றனர். https://www.youtube.com/watch?v=bbxxSlYL7fI