அத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் தலைமறைவு

அத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார்

by Staff Writer 22-04-2018 | 2:57 PM
COLOMBO (News 1st) அத்தனகல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெயாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சாமர இந்திரஜித் எனும் குறித்த சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர், உயிரிழந்த வர்த்தகரின் மணல் அகழ்வு வியாபாரத்தின் ஊழியராக செயற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதேவளை அத்தனகல்ல பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு தொழில் ரீதியான முறுகல் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டில் மல்வானையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர். சுதந்திரக் கட்சியின் இளைஞர் சங்கத்தினர் அத்தனகல்ல ரஜமகா விஹாரைக்கு அருகில் நேற்றைய நாள் முழுவதும் புதுவருட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்ததுடன், இரவு இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரவு 10.30 அளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், விஹாரைக்கு ​அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் ஜீப் வாகனத்திற்குள் இருந்தவரும் இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த நால்வரும் காயமடைந்த நிலையில் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது ஜீப்பில் இருந்தவர் உயிரிழந்ததுடன், அவர் மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ருவன் தேவபிரிய என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மணல் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியுள்ளார். காயமடைந்தவர்களில் 24 வயதான கர்ப்பிணித் தாயும் அடங்குகின்றார். காயமடைந்த கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட இருவர் இன்று பிற்பகல் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனகல்ல பதில் நீதவான் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.​ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=BLaGvTOP1mg