பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகளில் குளறுபடி?

வேலையில்லா பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகளில் குளறுபடி? 

by Bella Dalima 21-04-2018 | 3:56 PM
Colombo (News 1st) வேலையில்லா பட்டதாரிகளுக்கு இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெவ்வேறு முறைமைகளில் இந்த நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டார். வேலையற்ற பட்டதாரிகளில் 20,000 பேரை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது மாவட்ட செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன. எனினும், சங்கத்தின் உறுப்பினர்கள் நேர்முகப் பரீட்சைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டினார். கடந்த 6 வருடங்களாக, பட்டதாரிகளுக்னெ இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டது. சில மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள போதிலும், கண்டி, மாத்தளை போன்ற மாவட்டங்களில் அவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சிடம் வினவியபோது, பட்டதாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன குறிப்பிட்டார்.