by Bella Dalima 21-04-2018 | 4:56 PM
Colombo (News 1st)
அமோனியா வாயுவை சுவாசித்தமையால் 5 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தொழிலாளர்களை பாதுகாப்பற்ற முறையில் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்தார்.
எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாது தொழிலாளர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நேற்று (20) நடவடிக்கை எடுத்திருந்தது.
தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறும் வரையில் இது அமுலில் இருக்கும் என அதிகார சபையின் சூழல் மாசு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹொரனை பதில் நீதவான் காந்தி கன்னங்கர முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை நிறைவு பெற்றதை அடுத்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தின் போது நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பாணந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.