சவுதியின் முதல் திரையரங்கில் Black Panther

சவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

by Bella Dalima 21-04-2018 | 7:03 PM
சவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன. சவுதி அரேபிய அரசு கடந்த 35 ஆண்டுகளாக திரைப்படங்களைத் திரையிட தடை விதித்திருந்தது. இஸ்லாமிய ஒழுங்குகளையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மதத் தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் நீண்டகாலம் இருந்தது. இருப்பினும், சவுதி அரேபியாவில் தயாராகி வரும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுகின்றன. கட்டண அலைவரிசைகள் வழியாக உள்நாட்டில் ஒளிபரப்பாகின்றன. யூடியூப் யுகத்தில் சினிமாக்கள் மீது தடை விதிப்பது பொருத்தமற்ற செயல் என அங்குள்ள இளம் தலைமுறையினர் கருதிவரும் நிலையில், தீவிரவாத சித்தாந்தங்களை அழித்து, புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இஸ்லாமிய மிதவாத நாடாக சவுதி அரேபியாவை மாற்றப்போவதாகவும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார். இதை தொடர்ந்து, அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதன் ஒருகட்டமாக, பல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது. சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டிற்குள் 2500 திரையரங்குகளைக் கொண்ட 350 வளாகங்களைக் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் 1,30,000 பேருக்கு பகுதிநேர வேலைவாய்ப்பும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத்தில் முதன்முதலாக கட்டி முடிக்கப்பட்ட முதல் திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. ஹொலிவுட் திரைப்படமான Black Panther முதல் படமாக திரையிடப்பட்டது. இந்த படத்தின் முதல் நாள் - முதல் காட்சிக்கான டிக்கெட்கள் முதல் 15 நிமிடங்களில் ஒன்லைன் மூலம் விற்றுத் தீர்ந்ததாகத் தெரியவந்துள்ளது.