by Bella Dalima 21-04-2018 | 4:43 PM
Colombo (News 1st)
பெரும்போகத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா 60,000 ரூபா நட்டஈடு பெற்றுக்கொடுக்க விவசாய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, நாளை மறுதினம் (23) முதல் நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய காப்புறுதி சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்தார்.
நட்ட ஈடு பெற்றுக்கொள்ளக்கூடிய விவசாயிகளின் தகவல்களைத் திரட்டும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கென 2500 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மே மாத நிறைவிற்கு முன்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும் என விவசாய காப்புறுதி சபையின் தலைவர் கூறினார்.
90,000 விவசாயிகள் விவசாய காப்புறுதி சபையில் காப்புறுதி செய்துள்ளதாகவும் அவர்களில் 25 ,000 விவசாயிகளின் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, காப்புறுதி செய்யாத சுமார் 35,000 விவசாயிகளின் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
நெற்செய்கை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 50 வீத நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.