இறப்பர் தொழிற்சாலையின் அனுமதிப்பத்திரம் இரத்து

ஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து

by Bella Dalima 20-04-2018 | 8:52 PM
Colombo (News 1st) அமோனியா வாயுவை சுவாசித்தமையால் ஐவர் உயிரிழந்த ஹொரனை - பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறும் வரையில் இது அமுலில் இருக்கும் என அதிகார சபையின் சூழல் மாசு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார். ஹொரனை - பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர் ஒருவர், அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கிக்குள் நேற்று பகல் வீழ்ந்துள்ளார். இந்த விபத்தில் குறித்த நபர் மற்றும் அவரை காப்பாற்றச்சென்ற நால்வர் உயிரிழந்தனர். இவர்கள் ஹொரணை - பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாணந்துறை பொது வைத்தியசாலைக்கு இன்று அனுப்பப்பட்டன. விபத்தினால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட 38 பேர் ​ஹொரனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை, விபத்தின் போது மயக்கமுற்ற 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரனை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் தமர களுபோவில குறிப்பிட்டார். அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹொரனை பதில் நீதவான் காந்தி கன்னங்கர முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த அனர்த்தம் தொடர்பான அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.