இறப்பர் தொழிற்சாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

ஹொரனை இறப்பர் தொழிற்சாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

by Bella Dalima 20-04-2018 | 3:39 PM
Colombo (News 1st) ஹொரனை - பெல்லபிட்டிய பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாரணைகளுக்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்தார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் விசாரணைகளுடன் தொழில் திணைக்களத்தின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறித்த இறப்பர் தொழிற்சாலையில் பாதுகாப்பு தொடர்பில் ஏதெனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டார். ஹொரனை - பெல்லபிட்டிய பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். கவனயீனமாக செயற்பட்டமையால் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இறப்பர் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒருவர் அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கிக்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு சென்ற நால்வர், அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அனர்த்தத்தின் போது மயக்கமுற்ற 15 பேர் ​ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன