எலிசபெத் மகாராணியின் கோரிக்கை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி முன்வைத்த கோரிக்கை

by Bella Dalima 20-04-2018 | 5:41 PM
தனக்கு பிறகு பொதுநலவாய அமைப்பின் தலைவராக தனது மகனான இளவரசர் சார்லஸை நியமிக்க வேண்டுமென பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை இரண்டாம் எலிசபெத் மகாராணி கேட்டுக்கொண்டார். லண்டனில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்த எலிசபெத் மகாராணி, எதிர்காலத்தில் பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸ் அமர்வது தனது உண்மையான விருப்பம் என்று கூறினார். பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவி பாரம்பரியம் சார்ந்தது இல்லையென்பதால், ராணியின் மரணத்திற்கு பிறகு இயல்பாக வேல்ஸ் இளவரசருக்கு இந்த பதவி கிடைக்காது. எனினும், பக்கிங்ஹாம் அரண்மனையில் குழுமியுள்ள 53 நாடுகளின் தலைவர்களும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுநலவாய அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இந்த அமைப்பின் தலைவர் பதவி சுழற்சி முறையில் தரப்பட வேண்டும் என சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.