நிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே நோக்கம்

நிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கையின் நோக்கம்: ஜனாதிபதி

by Bella Dalima 20-04-2018 | 3:51 PM
Colombo (News 1st) உலக நாடுகளைப் போன்று நிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கையின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணையாக நடைபெறும் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதியை, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வரவேற்றார். தீவகமான இலங்கையிலுள்ள வனங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் சமுத்திரங்கள் ஊடாக அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு தாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட இந்த இராப்போசன நிகழ்வில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து, இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் 92 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.