இலங்கையின் நீர்ப்பாசனத்திட்டத்திற்கு சர்வதேசவிருது

இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சர்வதேச விருது

by Bella Dalima 19-04-2018 | 4:19 PM
Colombo (News 1st)  இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சர்வதேச விருது சற்று முன்னர் இத்தாலியின் ரோம் நகரில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 14 விவசாய முறைமைகளில் ஆற்றுப்படுகை திட்டமும் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளது. இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்ற ஆற்றுப்படுகையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஆற்றுப்படுகை திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், கடந்த வாரமளவில் அதனை உலக மரபுரிமையாக அங்கீகரிப்பதற்கு தீர்மானித்திருந்தது. இலங்கை விவசாய அமைச்சின் செயலாளர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார். பூகோள அமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சிறிய குளங்களை ஒன்றிணைத்து பெரிய குளமொன்றை வளப்படுத்தல் ஆற்றுப்படுகை கட்டமைப்பு என குறிப்பிடப்படுகின்றது. குளத்தின் நீரை சேமித்து வைப்பது மாத்திரமின்றி மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் வகையிலான கட்டமைப்பு இதன் மூலம் உருவாக்கப்படுகின்றது. இதேவேளை, இலங்கையின் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் குளங்களின் ஆற்றுப்படுகை என்பன தொடர்பில் அனுராதபுரத்தின் பெல்லன்கடவல கிராமத்தில் நியூஸ்ஃபெஸ்ட் சில மாதங்களுக்கு முன்னர் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தது. பல்வேறு விவசாய நீர்ப்பாசன நுணுக்கங்கள் இந்த ஆய்வில் அறியக்கிடைத்ததுடன், ஆய்விற்கு பேராதனை பல்கலைக்கழகமும் ஆதரவை வழங்கியிருந்தது. அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு வௌிப்படுத்தப்பட்ட இந்த நீர்ப்பாசன தொழில்நுட்பமே உலக மரபுரிமையாக தற்போது பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 20 நாடுகளில் இவ்வாறான பாரம்பரிய 50 விவசாய கட்டமைப்புகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.