அட்சய திருதியையில் நகை கொள்வனவில் வீழ்ச்சி

தங்கத்தின் விலை அதிகரிப்பு: அட்சய திருதியையில் நகை கொள்வனவில் வீழ்ச்சி

by Bella Dalima 19-04-2018 | 7:38 PM
Colombo (News 1st)  அட்சய திருதியை தினத்தன்று மங்கள பொருட்கொள்வனவு செய்தால் வருடம் முழுவதும் அஷ்ட ஜஸ்வர்யங்கள் பெருகும் என்ற ஆழமான நம்பிக்கை காலங்காலமாக இந்துக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதனால் அட்சய திருதியை தினத்தன்று தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வங்காட்டுகின்றனர். அட்சய திருதியையான நேற்றைய தினம் தங்கத்திற்கு 15 வீத வரி அறவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சில இடங்களில் அதிக விலைக்கு தங்காபரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால், நேற்று முன்தினம் (17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரி அறவிடப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்தது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவிற்கு தங்காபரண உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிட நடவடிக்கை எடுத்ததாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தங்கத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தீர்வை வரியை அடுத்து, நாட்டிலுள்ள நகைக்கடைகளில் ஒரு பவுன் தங்கம் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அண்ணளவாக 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவாலும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 55,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, இன்று 62,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 51,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபால் அதிகரிக்கப்பட்டு 57,000 ரூபாக இன்று விற்பனை செய்யப்படுகின்றது. செட்டித்தெருவிலுள்ள நகைக்கடைகளுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை இன்று வீழ்ச்சியடைந்திருந்ததை காணக்கூடியதாகவிருந்தது. தங்கத்தின் விலை அதிகரிப்பினால் நகைகளைக் கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.