கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது

கியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது

by Bella Dalima 19-04-2018 | 3:52 PM
கியூபா அதிபர் ராவுல் கெஸ்ட்ரோவின் வலது கரமான மிகேல் டயஸ் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கியூபாவில் கெஸ்ட்ரோ குடும்பத்தின் 59 ஆண்டுகால நீண்ட ஆட்சி முடிவுக்கு வருகிறது. கியூபப் புரட்சிக்கு பின்னர் தலைமை தாங்கிய ஃபிடல் கெஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து அவரின் தம்பி ராவுல் கெஸ்ட்ரோ அதிபராக இருந்து வந்தார். கடந்த மாதம் கியூபாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 605 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதற்காக கியூப நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் சிறப்புக்கூட்டம் முடிந்து தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மிகேலின் புதிய நியமனத்தின் மீது நாட்டின் தேசிய அவை வாக்களித்துள்ள போதிலும் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் மிகேலிடம் அதிபர் அதிகாரத்தை ராவுல் முறைப்படி கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் பதவியில் இருந்து விலகினாலும் 2021ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ராவுல் கெஸ்ட்ரோ செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிகேல், கடந்த 5 ஆண்டுகளாக அதிபர் பதவிக்கு தயார் செய்யப்பட்டார். நாட்டின் துணை அதிபராக மிகேல் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவருக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.