பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்

எலிசபெத் மகாராணி தலைமையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்

by Bella Dalima 19-04-2018 | 9:18 PM
Colombo (News 1st) 25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று லண்டன் நகரில் ஆரம்பமானது. பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமானது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றதுடன், 53 நாடுகளின் அரச தலைவர்களும் இதில் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் கலாசார நிகழ்வுகள் இன்றைய நிகழ்வை அலங்கரித்தன. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 53 நாடுகள் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு முதன்முறையாக 1971 ஆம் ஆண்டு மோல்டாவில் நடைபெற்றது. பொநுநலவாய நாடுகளின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். 2013 ஆம் ஆண்டு இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக 2015 ஆம் ஆண்டு மோல்டாவில் நடைபெற்றது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர் பதவி மோல்டா பிரதமர் ஜோசப் முஸ்கத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-க்கு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, மாநாட்டின் தலைவர் பதவியை 2020 ஆம் ஆண்டு வரை தெரேசா மே வகிக்கவுள்ளார்.