உள்ளூர்சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நிலை

உள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நிலை

by Staff Writer 19-04-2018 | 7:42 AM
COLOMBO (News 1st) இறக்கமதி செய்யப்படும் தங்கத்தின் பெறுமதிக்கு 15 வீத வரி அறவிட எடுத்திருக்கும் தீர்மானமானத்தினால் உள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையக்கூடும் என இரத்தினக்கல் மற்றும் தங்காபரண ஆராச்சி மற்றும் பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிட நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி செய்யப்படும் தங்காபரண உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என இரத்தினக்கல் மற்றும் தங்காபரண ஆராச்சி மற்றும் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நவரத்ன பண்டார அழககோன் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு சிறிய அளவில் வரி அறவிடுவது சிறந்ததது என அதிகார சபையினால் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பாரிய அளவில் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் , விதிக்கப்பட்டுள்ள வரியை விட குறைந்த வரியை செலுத்தி தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண ஆராச்சி மற்றும் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நவரத்ன பண்டார அழககோன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் தேவை தொடர்பில் சிறந்த ஆய்வினை மெற்கொண்டு அதற்கு அமைய வரி அறவிடுவது குறித்து தீர்மானிப்பதே சிறந்த திட்டம் என தாம் பரிந்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு 9000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 15,000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவிற்கு தங்காபரண உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இறக்கமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.