காலா மற்றும் விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் ரிலீஸ்

காலா மற்றும் விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் ரிலீஸ்

காலா மற்றும் விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் ரிலீஸ்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2018 | 11:12 am

பட அதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் காலா மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படங்களின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தினால் 48 நாட்களுக்கு மேல் புதிய படங்கள் திரைக்கு வராமல் இருந்தன. கடந்த மாதம் 30 இற்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்தன. இந்த மாத வெளியீட்டுக்கும் சுமார் 10 இற்கும் மேற்பட்ட படங்கள் தயாராக உள்ளன.

வழக்கமாக தமிழ் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வரும். ஆனால் இவ்வருடம் படஅதிபர்கள் போராட்டத்தால் எந்த ஒரு படமும் ரீலீசாகவில்லை.

இந்நிலையில், வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் வாரத்திற்கு 3 முதல் 4 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் படங்கள் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது.

தியேட்டர்களில் புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரிலீஸ் ஆகும். முதலாவதாக ‘மெர்குரி’ படமும், மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வரும்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.

இந்த படங்கள் தணிக்கை முடிந்து ‘யுஏ’ சான்றிதழை பெற்றுள்ளன. காலா படத்துக்கு முன்பே விஸ்வரூபம்-2 தணிக்கை முடிந்துவிட்டது. காலா படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கு முன்பாக தணிக்கை முடிந்த 40 இற்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில், காலா படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் காலா, விஸ்வரூபம்-2 ஆகிய 2 படங்களுமே அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் திகதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்