ஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளது

ஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவிப்பு

by Bella Dalima 18-04-2018 | 8:14 PM
Colombo (News 1st)  தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழரசுக் கட்சி விலகியுள்ளது. இதனையடுத்து, ஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சிவகரன் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கொள்கை ரீதியாக இனி பயணிக்க முடியாது எனவும் அக்கட்சியின் செயற்பாடுகளை அடியோடு நிராகரித்துவிட்டு சுயாதீனமாக இயங்கும் முடிவிற்குத் தாம் வந்துள்ளதாகவும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சிவகரன் குறிப்பிட்டார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, எழுத்துப்பூர்வமான உறுதியளிக்கப்படாத, நிபந்தனைகளற்ற நிலைப்பாட்டில் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததன் ஊடாக விடுதலை அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விலகியுள்ளதாக எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தினார். எவ்வாறாயினும், சிவகரன் தம்முடன் பேசியிருந்தால் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம் எனவும் பத்திரிகை வாயிலாகவே அவர்கள் விலகியதைத் தாம் அறிந்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுடன் இணைந்து செயற்படுவதாக கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. இந்நிலையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த மாதம் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தார். அத்துடன், அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதத்தின் போது தனக்கு பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு பல தடவைகள் சிவசக்தி ஆனந்தன் கோரியிருந்த போதிலும் அது மறுக்கப்பட்டிருந்தது. எனினும், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரதமரை சந்தித்த பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற 5 நிமிடம் சந்தர்ப்பம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.